தற்கொலையும் அதனை தடுப்பதற்கான உளவளத்துணையின் அவசியமும்

– M. Nelson Pirasath – Working paper – 18

‘தற்கொலை’ பற்றிய ஓர் அறிமுகம்
சமகாலத்தில் முக்கிய சமூகச்சிக்கலாக தற்கொலை காணப்படுகிறது. தற்கொலை என்பது ஒருவர் தன்னுடைய உயிரை தானாக முடித்துக்கொள்ளுதல் என சுருக்கமாக கூறமுடியும். பொதுவாக மனிதன் தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, தன் உடல் நலத்தைக் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசைப்படுகிறான். எனினும் இது சாத்தியமற்றதாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. வரலாற்றிலே மிகவும் இலகுவாக வாழ்ந்த காலமாகிய கோத்திரங்களாக மனிதன் வாழ்ந்த காலகட்டத்திலே தற்கொலை செய்து கொள்வதாவது மரபு ரீதியாக அம்மக்களிடத்தில் காணப்பட்டது. அத்துடன் உலகில் பல சமூகங்களில், பல்விதமான தன்மைகளுக்கும், வேறுபாடுகளுக்கும் ஏற்ப இப்பிரச்சினையின் பரம்பலிலும் வேறுபாடுகளைக் காணமுடிகிறது எனலாம்.

2.1 – தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கக் கூடிய வாய்ப்புள்ள சூழ்நிலைகள்

  • அண்மைக்காலத்தில் இடம்பெற்ற நெருங்கிய ஒருவரின் இழப்பு அல்லது பிரிவு.
  • மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மாற்றங்கள். (உதாரணம்: வலி அதிகமான, முடமாக்கக் கூடிய அல்லது குணப்படுத்த முடியாத நோய்கள்)
  • மது அல்லது போதைப் பொருள் அதீத துஷ்பிரயோகம் மனநிலை பாதிப்பு.
  • குடும்பத்தில் தற்கொலைகள் இடம்பெற்றுள்ளமை.
  • தற்கொலை செய்துகொள்வதற்கான முன்னைய முயற்சிகள்.
  • பொதுவாக தற்கொலை எண்ணங்களை உடையவர் மற்றையவர்களுக்குத் தெரியப்படுத்தும் விதங்கள்.
  • தனித்திருத்தலும், மற்றையவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமையும்.
  • தற்கொலை செய்துகொள்ளும் முறையைப் பற்றி தெளிவான திட்டமொன்றை வைத்திருத்தலும் அதனை வெளியிடலும்.
  • தனித்து விடப்பட்டிருத்தல் அல்லது தனிமைபற்றி கதைத்தல்.
  • தோல்விகள், பிரயோசமின்மை, நம்பிக்கை யின்மை அல்லது சுயமதிப்பு அற்றவாறான உணர்வுகளை வெளிக்காட்டல்.

2.2 – தற்கொலைக்கான பொதுவான அறிகுறிகள்
தற்கொலை மனநிலையிலே இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் அதை வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள். நல்லாத் தூங்கணும் போலிருக்கு. எங்காவது கண்காணாத இடத்துக்கு போயிடலாம் போலிருக்கு என்று சொல்லுவார்கள். ஒருவித விரக்தியோடு இப்படி யாராவது நடந்து கொண்டால் தயவுசெய்து என்ன பிரச்சினை என்று ஆதரவாகக் கேட்க வேண்டும். குழந்தையின் விடயம் என்றால் ஒரு நிமிடம் கூட தாமதிக்க வேண்டாம். ஆக, சில உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகளில் குறிப்pட்ட காலப்பகுதியில் காணப்படும் சில பிறழ்வான நடத்தை வெளிப்பாடுகள் கவனிக்கத்தக்கனவாகும். அவை தற்கொலைக்கு தூண்டும் குறிகளாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைந்து விடுவதுமுண்டு. ஆதர் கிரகமின் பின்வரும் கருத்துக்கள் இத்தகையோரின் போக்கினை சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

1. தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களிடம் அமைதியின்மை அல்லது மன உளைச்சல் அதிகம் இருக்கும்.
2. மனச்சோர்வும், நித்திரையின்மையும் தீவிர யோசனைகளும் இருக்கும்.
3. சிலவகை மருந்து மாத்திரைகளைப் பற்றி விசாரித்தல்.
4. கடுமையான நோயால் பீடிக்கப்பட்டிருத்தல்.
5. விபரீதக் கனவுகள், விபரீதக் காட்சிகள் பற்றிப் பேசுதல்.
6. தனிமை

இவ்வாறு தற்கொலை எண்ணத்திலிருப்பவர்களின் நடவடிக்கைகளும் வெளிப்பாடுகளும் புதிர் போன்றும் பதற்றமும் கவலையும் உணர்ச்சியும் நிறைந்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் எத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டையும் காட்டாதவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மேற்காட்டிய அறிகுறிகள் அல்லது நடத்தை சார் வெளிப்பாடுகள் யாரிடமாவது காணப்படும் போது நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர் உடனடியாக குறிப்பிட்ட நபரின் நடத்தை பற்றி உசாராகி விட வேண்டும். அத்துடன் பிரச்சினையை இனங்கண்டு ஆலோசனை வழங்கவும் வேண்டும்.

03 – தற்கொலை முயற்சிக்கான உளவளத்துணை செயன்முறை
உளவளத்துணை சேவையானது பரந்தளவில் மேற்கொள்ளப்படுவது இன்று காலத்தின் தேர்வாக மாறிவிட்டது. சகல துறைகளிலும் உளவளத்துணை அவசிய சேவையொன்றகாகக் கருதப்பட்டு வரும் நிலையில், பாடசாலை மட்டத்திலும் கிராம மட்டத்திலும் உளவளத்துணை சேவை பரவலாக்கப்பட வேண்டும். அதற்காக தொழில்வாண்மை உளவளத்துணையாளர்கள்
சேவையில் ஈடுபடுத்தப்படுவது அவசியமாகும். குறிப்பாக சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி கற்கை நிலையத்திலிலுந்து ஒவ்வொரு வருடமும் 100க்கும் மேற்பட்டோர் உளவியல் உளவளத்துணை கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர். இவர்கள் உளவளத்துணை சேவை புரிவதற்கு சிறந்த வளமாகவுள்ளபோதிலும் இவர்கள் இச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படாது உள்ளனர்.உளவளத்துணை சேவை பரந்த பரப்பைக் கொண்டதால் அவற்றில் தொழில்வாண்மை அறிவைக் கொண்டவர்கள் அவசியம் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் அதன் ஊடாக உளவளத்துணை சேவையின் இலக்கை சரியான முறையில் சமூகப் பிரச்சினையைக் குறைப்பதில் பயன்படுத்தமுடியுமென்பதே அத்துறைசார்ந்தோரின் கருத்தாகவுமுள்ளது.

தற்கொலையை தடுப்பதற்குரிய வழிமுறைகளே இங்கு செயன்முறைகளாக அமைகின்றன. தற்கொலை நாட்டம் உள்ளவர்களின் அறிகுறிகளை அடையாளம் காணத்தக்க அறிவைப்பெறுவதே தற்கொலைத் தடுப்பின் முதற்கட்டமாகும். ஏனெனில் தற்கொலைகள் ஏதோவொரு முன்னறிவித்தல் இல்லாமல் நடைபெறுவதில்லை. அவ் முன்னறிவித்தலை விளங்கிக் கொள்ளக்கூடிய அறிவு நம்மில் பலருக்கு இல்லையே தவிர தற்கொலைகள் திடீரென சடுதியாக எடுக்கப்படும் முடிவு. தற்கொலைகளை தடுக்க முடியாதென கூறுவது தவறு. தற்கொலை செய்து கொள்ளும் நபர்கள் தற்கொலை எண்ணங்கள் தொடர்பான துப்புக்களையும், எச்சரிக்கைகளையும் கொடுப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இறுதிவரை தம்மையாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்ததாக தற்கொலையில் இருந்து மீண்டவர்களின் அனுபவம் கூறுகிறது.

அநேகமாக தற்கொலை மேற்கொண்ட அனைவருமே தமது உணர்வுகளை நெருக்கமானவர்களிடம் வெளிக்காட்ட முயற்சி எடுத்ததை அவர்கள் இறந்த பின்னர்தான் நெருக்கமானவர்கள் உணர்ந்துகொள்கின்றனர். இது ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது’. தற்கொலை மற்றும் தற்கொலை செய்பவர்கள் உடனடியாக செய்துவிடுவதில்லை. இத்தகைய தன்மையுடைவர்களிடையே சில குணம்குறிகள் காணப்படுவதாக அத்தியாயம் இரண்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தற்கொலை நாட்டம் உள்ளவர்களை அடையாளம் காணும் போது அவரை உளவளத்துணையாளரிடம் அழைத்துச் செல்வதன் மூலம் வாழ்வின் அர்த்தங்களையும். வளங்களையும் புரிய வைக்க முடியும். ஓவ்வொரு மனித உயிரும், உறவுகளும் எமக்கு வேண்டியவை. அவர்களை பாதுகாப்பதும் பேணுவதும் எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை ஆகும். உள ஆற்றல்துணை சேவையை யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையிலும், அகவொளி குடும்ப ஆற்றுப்படுத்தல் துணையிடமும், சாந்திகம் ஆற்றுப்படுத்தல் நிறுவனத்திடமும் செல்வதன் மூலம் சிறந்த ஆற்றுப்படுத்தலை பெற முடியும்.தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஒரு நிமிடமாவது மனம்திறந்து ஒருவருடன் கதைக்கும் போது உங்கள் பிரச்சினை தீர்த்து ‘நான் எடுத்தது முட்டாள்தனம்’ என்பதை உணரவைக்கும். தற்கொலையை தடுப்பது மிகவும் எளிமையான விடயம் ஆனால் நம்மில் பலர் அதற்கு முயலுவதில்லை. அதற்கு இரண்டாவது அத்தியாயத்திலே குறிப்பிட்ட தற்கொலைக்குரிய அறிகுறிகளைக் கொண்டு தற்கொலை செய்யக்கூடிய அபாயமுள்ளவர்களை அடையாளம் காண பழகவேண்டும்.

3.1 – தற்கொலைக்குப் பிந்தைய தடுப்பு
தற்கொலை செய்துகொண்டவரின் உறவினர் அல்லது நண்பர்கள் அந்த எண்ணத்தின்பால் தூண்டப்படாமல் இருக்க இந்த சேவை நடத்தப்படுகிறது. அவர்களுடன் உறவாடி, அந்த எண்ணத்தை களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாழ்வில் எந்த விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படுங்கள். நிதானமாக இருக்கவும். தியானம் செய்து பழகவும். தவறான சேர்க்கையைத் தவிர்க்கவும். சமூக சேவையில் பங்கெடுத்துக் கொள்ளவும். ஆளுமைத் திறன் மேம்பாடு தொடர்பான புத்தகங்களை அதிகம் படிக்கவும். உலக சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எப்போதும் படிக்கவும். நல்ல இசையைக் கேட்கவும். ஆன்மீக சிந்தனையில் ஈடுபடவும்.

மேற்கூறிய அம்சங்கள் அனைத்தும் தற்கொலை எண்ணத்தை நிச்சயம் தவிர்க்க உதவும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தற்கொலை எண்ணம் வரலாம். அதற்காக தற்கொலை செய்ய வேண்டும் என்பதில்லை. நம் மனதில் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? எனவே, தற்கொலை மட்டும் ஏன் செய்ய வேண்டும். நமக்கு கிடைத்தது ஒரே ஒரு வாழ்க்கை. அதைவிட உயர்ந்தது எதுவுமில்லை. அந்த வாழ்க்கையை வீணடிப்பதை அறிவுள்ள எந்த மனிதனும் செய்ய மாட்டான். எனவே, வாழும் வரை மகிழ்ச்சியாக வாழலாம். (http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1106&cat=9)

04- தற்கொலையை தடுப்பது தொடர்பாக இலங்கை யாழ்ப்பாணம் ‘Sumitharayo’அமைப்பின் செயற்பாடுகள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு பாலத்தை ஸ்ரீலங்கா சமித்தியோ அமைத்துள்ளது. 1953இல் சமரிட்டன் (Samariton) இயக்கத்தின் ஆரம்பத்தின் ஆரம்பகர்தா சாடவாரா அவர்கள் (reverend chadvaran) பூப்பெய்தலின் அறிகுறிகளை பாலியல் நோய் என்று எண்ணி பயந்த தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஒரு இளம்யுவதியின் இறுதிச்சடங்குகளை நடத்த அழைக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற மரணங்களை தடுக்க ஒரு உணர்வுபூர்வமாக உதவும் சேவையை ஆரம்பித்தார். இவ் இயக்கமானது இலங்கையில் 1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அமைந்துள்ள 10 சிறைகளைக் கொண்டுள்ளது. அதன் ஒரு சிறை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது. சுபித்திரயோ இயக்கத்தின் குறிக்கோள்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • நிலையத்தின் முக்கிய நோக்கமானது தற்கொலை எண்ணம் தோன்றும் வேளைகளில் அந்நபர்களுக்கு உணர்வுபூர்வமான உதவியை வழங்குவதேயாகும்.
  • தம்மை புரிந்து ஏற்றுக் கொள்ளயாரும் இல்லை என உணருபவர்களின் துன்பம், தனிமை, விரக்தி, மனத்தளர்வு, மனஅழுத்தம் போன்றவற்றையும் செவிமடுத்தலின் மூலம் போக்குவரத்து நிலையங்களில் சேவை புரியும் தொண்டர்கள் முயற்சிப்பர்.
  • எமது நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதால் தனிமனித சுதநந்திரம் முடக்கப்படாது, மாறாக அடையாளம் தெரிவிக்காது ‘யாரோவாக’ தொடர்பு கொள்ள தரப்படும் உரிமையால் அது மேலும் பாதுகாக்கப்படுகின்றது.
  • ஒரு நபர் நிலையத்தடன் தொடர்பு கொண்டார் என்பதும் (தொலைபேசி, கடிதம், நேரில் வருகை, அல்லது ஏதேனும் ஒரு வழியில்) அவரால் எம்மிடம் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் இரகசியமாக பேணப்பட வேண்டும். என்பது எமது அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும்.
    நிலையங்கள் அரசசார்பற்றதும் மதச்சார்பற்றதும் ஆகும். தொண்டர்கள் தமது நம்பிக்கைகளை அவர் மேலும் திணிப்பதில்லை.
  • அனுபவமிக்க தொண்டர்கள், ஏனைய தொண்டர்களை தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து வழிகாட்டி, ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
  • இலட்சிய தொண்டர்.
  • தொழில் நிபுணத்துவ ஆலோசகர்களிடமிருந்து சில சமயங்களில் நிலையங்கள் அறிவரை பெறக்கூடும்.

இவ்வாறான பரந்துபட்ட குறிக்கோள்களை அடைவதன் ஊடாக தற்கொலைகளை கட்டுப்படுத்த முயலுகின்றது. மேலும் சில வேளைகளில் நட்புடன் ஆதரித்தல் மட்டுமே போதுமானதாக அமையாது. தொழில் வல்லுநரின் பட்டியலில் உளஆற்றுப்படுத்துனர், மனோதத்துவ வைத்தியர்கள், வக்கீல்கள், கணக்காளர் என விசேட நிபுணத்ததுவம் பெற்ற தொழில் வல்லுநர் பலர் இருப்பர். நடைமுறையில் 5% ஆதரவு நாடுநர்கள் இவ்வகையான மேலதிக உதவி தேவைப்படுவராக இருக்கலாம். இவர்களை தொழில் வல்லுனர்களை சந்திக்கும்படி ஆலோசனை வழங்குவதன் மூலம் தற்கொலைகள் குறைத்துக் கொள்ள முடியும். சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்தலாம்.

அபிவிருத்தி அடைந்து வரும் சில நாடுகளில் தற்கொலை புரிதல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும். ஆனால் இலங்கையில் இவ்வாறான சட்ட இறுக்கம் இல்லாமையினால் அதிகளவான தற்கொலை முயற்சிகளை கற்றும், செயற்படுத்திக் கொள்கின்றனர். தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலம் இவற்றை குறைக்க முடியும். தண்டனையானது மேலும் தற்கொலையை ஈடுபட வைக்க கூடாது. அதனை வெறுக்கக் கூடியதாக அமைய வேண்டும். அப்பொழது தற்கொலைகளை குறைக்க முடியும்.

சுமித்ரயோவை பின்வரும் விதங்களில் தொடர்பு கொள்ளலாம்.

  • தொலைபேசி: 0112692909 / 0112683555 / 0112696666
  • மின்னஞ்சல்: sumitra@sumithrayo.org/ sumithrayo@sltnet.lk
  • இணையத்தளம்: www.sumithrayo.org

05 – தற்கொலையை தடுப்பதற்குரிய ஏனைய வழிமுறைகள்
பிரச்சினையைச் சந்திக்க வேறு வழிகள் இருப்பதை துணைநாடிக்கு புரிய வைப்பது பிரச்சினை இருக்கிறது என்றால் நமது மனதில் போட்டு அவற்றை புதைக்காமல் பிரச்சினைகளை சமாளிக்க, நமது மனதுக்குத் தெம்பூட்ட சுற்றுலா, தியானம், நண்பர்களிடம் மனம் திறந்து பேசுதல் ஆகிய வழிமுறைகளைக் கையாளலாம். மேலும் துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி என்பதைப் புரியச் செய்ய வேண்டும்.குடிப்பழக்கம், போதைப்பொருட்பாவனை என பல தீய வழிகளில் மனதைச் செலுத்தாமல் நண்பர்களை சரியாகத் தெரிவு செய்து அவர்களிடம் சந்தோசங்கள், துக்கங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இளவயதில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைத் தவிர்க்கலாம்.

வேலையின்மை, படிப்புக்கு ஏற்ற வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனின் நம்பிக்கையுடன் படிப்புக்கு ஏற்ற எல்லாத்துறைகளிலும் வேலை தேடவேண்டும். அரச உத்தியோகம் என்று எதிர்பாராமல் சுய வேலைவாய்ப்புத்துறையிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் ஒரு சமூக சேவை இயக்கத்தை ஆரம்பித்து உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதோடு பிரச்சார விளம்பர நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்பு ஊடகங்களினூடாக நடைமுறைப்படுத்தல். சமூக மருத்துவமனைகளில் உளவியல் நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அத்தோடு குடும்ப நலத்துக்கு முக்கியத்துவம் தரப்படுத்தல் வேண்டும்.ஒரு மனிதன் சமுதாயத்தோடு நல்ல உறவோடும் வாழ்வதற்கும் சமூகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் மனப் பக்குவத்தை அனைவரும் அடைந்திட சமூக நலத்திட்டங்களையும் வளர் கல்வி முறைகளையும் தற்கொலையின் ஒழுக்கவியல்சார் பெறுமானத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் இலகுவாகக் கிடைக்கக் கூடிய விவசாய இரசாயணங்கள் மற்றும் பூச்சி நாசினி போன்ற விஷப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டை கொண்டு வருதல்.
மனஅழுத்தத்தையும், நெருக்கடியான சூழ்நிலையயையும் தவிர்ப்பதற்கு ஓய்வெடுக்கும் முறைகளையும் மனதை ஒருநிலைப்படுத்தும் உத்திகளையும் கற்றுக் கொடுக்கலாம்.

குறிப்பாக பொழுதுபோக்கு விளையாட்டு, இசைப்பயிற்சி தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் சமயக் கல்வி ஆகிய சிறந்த மனித வள மேலாண்மை முறைகளை சொல்லிக் கொடுக்கலாம். வீட்டாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கச் செய்யலாம். அதாவது சிறந்த குடும்ப கட்டமைப்பை பேணுதலாகும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களினை சரிவர இடம்பெறுகின்ற வேளையில தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளை இல்லாது ஒழிக்க முடியும் என நினைக்கின்றேன்.

உசாத்துணை நூல்கள்
இரவிச் சந்திரன்,. கு (2005) ‘சிக்மன் பிராய்ட் உளப்பகுப்பு அறிவியல்’, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
சாவித்திரி,. எஸ் (1989) :’பொது உளவியல்’, அரவிந்த் பப்ளிகேசன், சென்னை
தனபாலன்,. ப (2000) ‘:பிரயோக உளவியல’, கங்கை பிரின்டேஸ், யாழ்ப்பாணம்

– M. Nelson Pirasath,
NISD, Kilinochchi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *