தற்கொலையும் உளசமூகப் பிரச்சினைகளும்

 – ஆறுமுகம் புவனலோஜினி – Working paper – 21

தற்கொலை என்பது…
ஒரு மனிதன் தனிப்பட்ட பொது நோக்கம் கருதி தானாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டு தன் உயிரைமாய்த்துகொள்ளுதல் தற்கொலை என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒருவன் தன்னை தானே கொலை செய்தல் ஆகும்.

ஓவ்வொரு மனிதனும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது எதிர்ப்பார்த்தோ எதிர்ப்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பலர் அவற்றுக்குத் தன்நம்பிக்கையோடு முகம் கொடுத்து அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் சிலர் தன்நம்பிக்கையை இழந்து அப்பிரச்சினையால் உள்ளத்தாலும் உடலாலும் சோர்வடைந்து போகின்றனர். இவ்வாறான மனப்போராட்டங்கள் உளநலத்தை பாதிக்கின்றபோது அது ஒருவரின் சாதாரண நடத்தையில் மாற்றங்களையும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது அதன் விளைவு பல விபரீதங்களை உண்டாக்கும் அவற்றில் ஒன்றாகவே தற்கொலை கருதப்படுகின்றது.

உலக சுகாதார கழக அறிக்கையின் படி உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டது. சராசரியாக 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்வோரில் அதிகமானோர் 15-29 வயதுடையோரும் 70 வயதிற்கு மேற்பட்டோரும் காணப்படுகின்றனர். உலக அளவில் தற்கொலை முயற்சியில் அதிகமாக ஈடுபடுவது பெண்கள் ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இறப்பதுஆண்கள் தான் அதிகம் என கூறப்படுகின்றது.  அதிகமாக நடுத்தர வருமானத்தை பெறும் நாடுகளிலே தற்கொலை முலமான உயிரிழப்பு நடைபெறுகின்றது.

அந்த வகையில் இலங்கையானது. வருடத்திற்கு 80;;,000 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.  தற்கொலை வீதத்தின் அடிப்படையில் இலங்கையானது நான்காவது இடத்தில் உள்ளது. 172 உலக நாடுகளை கொண்ட சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்விலே இது கண்டறியப்பட்டுளளது. இதில் முதலாவது கயானாவும், இரண்டாவது வடகொரியா, மூன்றாவது தென்கொரியாவும் நான்காவது இலங்கையும் காணப்படுகின்றது.  இலங்கையில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 28.8 வீதமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கண்டறிந்துள்ளது. சர்வசேத அளவில் 28 நாடுகளில் மட்டுமே தற்கொலையை தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளில் அவ்வாறான நிலை இல்லை.

பொதுவாக தற்கொலை பல வழிகளிலும் நடைபெறுகின்றது. அந்த வகையில்…

 • நஞ்சருந்துதல்
 • தூக்கில் தொங்குதல்
 • ஓடும் புகையிரதத்தில் பாய்தல்
 • நெருப்பில் எரிதல்
 • தண்ணீரில் பாய்தல்
 • உயரத்தில் இருந்து பாய்தல்
 • தூப்பாக்கியினால் தன்னைதானே சுட்டு கொள்ளுதல்
 • அமிலங்கள், எரிபொருட்கள் அல்லது மருந்துகளை குடித்தல்.

போன்ற வழிகளில் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்றது. இதன் அடிப்படையில் ஒருவன் தன்னை மாய்த்து கொள்ள முடிவெடுக்கின்றான் என்றால். அவன் மனதில் ஏதோ ஒரு பாதிப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.

அவ்வாறு ஒரு மனிதனை தற்கொலைக்கு முடிவெடுக்க துண்டும் காரணிகளாக…

 • வறுமை
 • நாட்ப்பட்ட நோய்த்தாக்கம்
 • தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு
 •  மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல்
 • காதல் தோல்விகள்
 • குற்றவுணர்வு
 • முன்பு தற்கொலைக்கு முயற்சித்திருத்தல்
 • குடும்ப தற்கொலை பின்னணி (பரம்பரை)
 • வன்முறைக்கு மற்றும் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டிருத்தல்
 • சில அவமானங்களை தாங்க முடியாத நிலை
 • திடீர் கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல்
 • கௌரவம் பாதிக்கப்படல், வேலையின்மை
 • விரும்பத்தகாத கர்ப்பம் அல்லது கருக்கலைப்பு,
 • இழப்புக்கள்
 • இல்வாழ்க்கையில் முறிவு
 • பரீட்சையில் தோல்வி
 • கடன் தொல்லைகள்

போன்றவற்றுடன் உளநோய்களான மனவழுத்தம், இருமுனைப்பிறழ்வு, மனப்பிழவை போன்ற நோய்களுடன் வாழ்பவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அதிகம்.

மேற் குறிப்பிட்டநிலைகளில் பாதிக்கப்பட்டோர் அவர்களது பிரச்சினைக்குமுகம் கொடுக்க முடியாத சந்தர்ப்பம் வருகின்றபொழுது தற்கொலை எனும் முடிவெடுக்கின்றனர். பொதுவாக தற்கொலை பின்னணியை நோக்குமிடத்து இவர்கள் ஏதாவது ஒரு மனப்பாதிப்பின் காரணமாக இவ் முடிவை எட்டுகின்றனர். இலங்கையில் மொத்தமாக 2.3மில்லியன் பேர் உளப்பிரச்சினை உடையவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணத்துடன் இருப்பவரின் அறிகுறிகள்:

• தான் பிரயோசனமற்றவர் என அடிக்கடி கூறுதல்
• வாழ்வதற்கு எந்த வழியும் இல்லை என எண்ணுதல்
• நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் சழூகத்திடமிருந்து விலகியிருத்தல்
• குளிசைகள், நஞ்சு மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் தற்கொலைக்கு சாதகமான வழிகள் பற்றிய தகவல்களை திரட்டுதல்.
• மனநோய்க்குறிய அசாதாரண நடத்தைகளை வெளிப்படுத்தல்
• தற்கொலை செய்யப்போவதாக வெளிப்படையாக அடிக்கடி கூறுதல்
• பொறுப்புக்களை மற்றவரிடம் கையளித்தல்.
• குடும்பம் நண்பர்களுடன் தொடர்பாடலைப் பேணாமல் ஒதுங்கி இருத்தல்
• அன்றாட காரியங்களில் ஆர்வமின்றி இருத்தல்
• நடக்கும் எல்லா பிழைகளுக்கும் தாமே காரணம் என்று கூறுபவர்கள்
• தனிமையில் இருந்து அழுபவர்கள் அல்லது அழமுடியாமல் தவிப்பவர்கள்.

தற்கொலை தடுப்பு:

 • தற்கொலை எண்ணத்துடன் இருப்பவரின் பிரச்சினைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுத்தல்
 • ஆதரவு வழங்குதல், ஆதரவை ஏற்படுத்திக்கொடுத்தல்
 • உளமருத்துவர் ஒருவருடன் தொடர்பு கொள்ளல்
 • தற்கொலை எண்ணம் தீவிரமாக காணப்படின் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தல்
 • தற்கொலை அபாயம் காணப்படின் தற்கொலைக்கு பயன்படுத்தக்கூடிய ஆபத்தான பொருட்களை அகற்றுதல் / பாதுகாப்பாக பேணுதல்
 • குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துதல்
 • நல்ல நண்பர்களை உருவாக்கி மனசுமையை குறைப்பதற்கு உதவி செய்தல்
 • நல்ல பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடவைத்தல்
 • பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது தகுந்த உளவளத்துணை சேவையை பெற்றுகொடுத்தல்
 • விழிப்புனர்வை ஏற்படுத்தல் – தற்கொலையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் சமூக மட்டத்தில் விழுப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும்.
 • யோகாசனம், தியானம் போன்ற சாந்த வழிமுறைகளில் ஈடுபட வைத்தல்
 • தற்கொலை எண்ணம் உடையவர்கள் தமது தற்கொலை பற்றிய எண்ணத்தை மிக நெருங்கியவர்களிடம், மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூறுகின்றனர் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நல்ல புத்திமதிகளை கூறி ஆற்றுப்படுத்தல் வேண்டும்
 • வாழ்க்கைக்கு தேவையான திறன்களை கற்றுக்கொடுத்தல்
 • சிந்தனையில் மற்றும் நடத்தையில் மாற்றத்தை ஏற்ப்படுத்தல்
 • உளவளத்துணைவழங்குதல்
 • தொடர் கண்காணிப்பு செய்தல்

தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கும் ஒருவர் மற்றவர்களிடம் உதவி கேட்க்காமல்
இருக்கலாம். ஆனால் அவர் உதவியைவிரும்பவில்லை என்பது அதற்கு அர்த்தமாகாது. தற்கொலை செய்து கொண்டவர்களில் அனேகமானோர் சாவதற்கு விரும்பி அதைச் செய்யவில்லை. பிரச்சினைகளால் ஏற்பட்ட வலியை வேதனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே அதை செய்துள்ளனர் எனவே தற்கொலைக்கான அறிகுறிகளை சரியாக புரிந்து கொண்டு அவைகளை அக்கறையுடன் கவனத்தில் கொள்ளும் போது தற்கொலை தடுப்பை இலகுவானதாக்கலாம்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்கான உளவளத்துணையின் அவசியம்…
உளவளத்துணை என்பது ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கி செல்கின்ற பயணத்தில் தான் எதிர் கொள்ளும் தடைகளை வெற்றிகொள்ள அவருக்கு அளிக்கும் தொடர் செயற்பாட்டு உதவியே உளவளத்துணையாகும் என்று அமெரிக்க உளநல சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒருவருக்கு அவரை பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதற்கமைய அவர் எதிர் நோக்கும் பிரச்சினையை அவரே தீர்த்து கொள்வதற்கு வழங்கப்படும் உதவியாகும் எனும் கூற்றினை கார்ள் றோஐர்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் ஒருமனிதன் ஏதாவது ஒருபிரச்சினையை எதிர் நோக்குகின்ற சந்தர்பத்தில் அந்த பிரச்சினையை வெற்றிகரமாக எதிர் கொள்ள உதவி புரிதலே ஆகும் இவ்வாறு உதவிபுரிவதற்கு யாரும் இல்லை என்று அவ் மனிதன் எண்ணுகின்ற பொழுது தற்கொலை எனும் முடிவுக்கு வருகின்றான்.

ஒரு மனிதன் பிரச்சினையை எதிர் நோக்குகின்ற பொழுது அப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க தெரியாமல் தற்கொலை முயற்சிக்கு முடிவெடுக்கின்றான். பிரச்சினைக்கான தீர்வு அல்லது முடிவு தற்கொலை அல்ல. தற்கொலை என்பது அவசரத்தில் எடுக்கும் முடிவுமட்டுமே. இது நிரந்தரமானது இல்லை. பிரச்சினை என்பது உருவாகின்ற பொழுது கட்டாயமாக அதற்கான தீர்வும் இருக்கும். ஆனால் பலருக்கும் அத் தீர்வினைஅடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமாகவே உள்ளது. அவர்கள் தமதுவாழ்வில் நல்ல முடிவினை எடுப்பதற்கும் , அவருக்குள் மறைந்திருக்கும் பலங்களை அடையாளம் காண்பதற்கும் உளவளத்துணை உதவி புரிகின்றது. எனவே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்கும், தற்கொலை எண்ணத்துடன் இருப்பவருக்கும்,பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க தெரியாதவர்களுக்கும் உளவளத்துணைமிகவும் முக்கியமானதாகும்.

அந்த வகையில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்குவோம்.
54 வயதுடைய துணைநாடி ஒருவர், இவருக்கு திருமணமாகி 4 பிள்ளைகள் மூன்று பெண் பிள்ளையும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. அதன் பின் இவரது கணவர் நோய் ஏற்ப்பட்டு இறந்து விட்டார்.  இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. ஒரு பெண் பிள்ளை இறந்து விட்டது. இதன் பின் இவர் மனச்சோர்வுக்கு உள்ளானார். இவர் தொடர்ந்தும் கவலையுடன் காணப்பட்டார். தனிமையில் இருந்தார், நித்திரை இல்லாது துன்பப்பட்டார், பசி இல்லை. அழுகை, சமூகத்துடன் தொடர்பு குறைவு போன்றவை இவரிடம் காணப்பட்டது.

இவரது மகன் இவருடன் தான் இருக்கின்றார் மகன் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. இவர் இல்லாத சந்தர்பங்களில் துணைநாடி  தனியாகதான் வீட்டில் இருப்பார். திருமணமான ஒரு மகளும் இவருடன் தான் வசிக்கின்றார். இந்த மகளுக்கு ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை துணைநாடியுடன் மிகுந்த அன்புடன் பழகியது. துணைநாடியின் இரண்டதவது மகள் இவரை விட்டு தூரத்தில் வசித்து வந்தார். தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில்; மட்டும் இவர் தனது தாயை வந்து பார்வை இடுவார்.

இவ்வாரு இருக்கையில் துணைநாடிக்கும் இவருடன் இருந்த மகளுக்கும் கருத்து முரண்பாடு ஏட்பட்டதனால் துணைநாடியும் மகளும் கதைப்பதில்லை அதன் காரணத்தால் தனது குழந்தையை துணைநாடியிடம் அனுப்புவதை தடுத்து விட்டார் மகள். இந்த நிலையில் துணைநாடி மீண்டும் மனச்சோர்வினால் அதிகமாக பாதிக்கப்பட்டார். துணைநாடிக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. அவர் உலகத்தையே வெறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

இதனை கண்டஅயலவர் உளவளத் துணையாளரை தொடர்பு கொண்டனர். அவரும் துணைநாடியை சந்தித்து நல்ல முறையில் கலந்துரையாடினார். துணைநாடியின் பிரச்சினை பற்றி கேற்கப்பட்ட போது அவர் கண்ணீருடன் தனது கதையை மேற்கண்டவாறு கூறிமுடித்தார்.

துணைநாடியினுடைய பிரச்சினை அவரது குடும்பத்தினருடன் உரையாடி தீர்க்க கூடியதாக இருந்தது. அவர் தனது பேரக்குழந்தையை தன்னிடம் விடும் படி மகளிடம் கூற சொன்னார். அத்துடன் துணைநாடிக்கு ஒரு சகோதரி இருப்பதாகவும் அவரிடம் சென்று வந்தால் மனம் ஆறுதல் அடையும் எனவும் கூறினார். அதன் படி அவரது மகளிடம் துணைநாடியது நிலை பற்றியும் அவரது மனச்சோர்வின் தன்மை பற்றியும் அவருக்கு கூறப்பட்டது. அவர் அவ் விடயங்களை ஏற்றுக்கொண்டார். அதன் பின் அக் குழந்தையை துணைநாடியிடம் அனுப்ப  முடியுமா? என கேட்க்கப்பட்டது அதனையும் அவர் ஏற்றுக்கொண்டார். அதன் பின் குழந்தை துணைநாடியிடம் சென்று வர தொடங்கியது அதனால் அவரது மனக்கவலைகள் குறைந்தது.  அதன் பின் நேரம் கிடைக்கும் சந்தர்பத்தில் அவரது சகோதரியிடம் சென்றுவரும் படி கூறப்பட்டது. துணைநாடி சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டார். துணைநாடியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவருடைய மன நிலை பற்றி விளக்கமாக கூறப்பட்டது.  அவருடைய மனச்சோர்வுக்கு தற்போது தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார். அதனை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

இதில் குறிப்பிடபட வேண்டிய விடயம் ஒன்று, இந்த துணைநாடி இரண்டு தடவைகள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.  ஆனால் அதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது பிரச்சினை இனங்காணப்பட்டு அதற்கான தீர்வும் கிடைக்கப்பட்டது. இவர் இழப்புக்களை சந்தித்து மனகவலையுடனும் துன்பத்துடனும் வாழ்ந்து வந்தார், இவருடைய கருத்துக்கள் அனைத்தையும் கேட்டு அவரை புரிந்து கொண்டபோது அவருடைய மனகவலைகள் குறைக்கப்பட்டது. தற்போது இவர் எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

மேற்குறிப்பிட்ட விடயம் ஒரு துணைநாடி எதிர் நோக்கிய பிரச்சினையும் அவர் எடுத்த தற்கொலை முடியும் அதன் பின் அவர் காப்பாற்றப்பட்டு அவரது பிரச்சினைதீர்க்கப்பட்டுகுடும்பத்துடன் இணைக்கபபட்டது தொடர்பான விடயங்கள் ஆகும்.

ஆகவே ஒவ்வொரு மனிதனுடைய தற்கொலை முடிவும் ஏதோ ஒரு உளபாதிப்புடனே தொடர்புபட்டவை ஆகும் . ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளும் வெ வ்வேறுபட்டவை அதேபோன்று அவர்களுடைய பிரச்சினைகளும் வித்தியாசமானவை. உளபிரச்சினைகளை உள்ளத்தில் அடக்கி வைக்காமல் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் நன்று! இதனை ஒரு உளவளத் துணையாளரிடம் பகிர்ந்து கொண்டால் விடயங்கள் அனைத்தும் இரகசியம் காக்கப்படுவதோடு உளவள சிகிட்சையும் வழங்க முடியும்.

தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்குவது அனைவரினதும் கடமையாகும். தற்கொலை எனும் துன்பகரமான சம்பவங்கள் வயது வித்தியாசம் இன்றி இடம் பெருகின்து. இதனால் அவற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.
இலங்கை முப்பது வருடகால யுத்தத்தினால் பெரிய இழப்பை கண்டது, அத்துடன் வருடத்துக்கு வருடம் இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் தினமும் தற்கொலையினால் மனித வளம் அழிந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்கொலை தடுப்பதில் மனிதர்கள் மட்டுமின்றி ஊடகங்களிற்கும் முக்கிய பங்கு இருக்கின்றது.
இணையத்தளத்தின் ஊடாக சிலர் பதிவை மேற்கொண்டு வெளியிட்ட பின்பு தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறானமன நிலை யாருக்கும் ஏற்ப்பட்டால் உங்களுக்கு உதவிபுரியும் படி கேளுங்கள் கட்டாயமாக யாரும் உதவி செய்வார்கள். அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்தை நாடுங்கள். அங்கு இலவச உளவளத்துணை சேவை உங்களுக்கு கிடைக்கும்.  தற்கொலை தடுப்பு அனைவரினதும் பொருப்பாகும். தற்கொலை ஒரு சமுதாய நலப்பிரச்சினையாகும். தடுப்பதற்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும். தற்கொலை எண்ணங்கள் புரிந்துகொள்ள கூடியவை, தனிப்பட்டவை மற்றும் சிக்கலானவை ஆபத்திலிருப்பவரை திறந்த மனதுடன் அணுகுங்கள். தற்கொலை தடுக்க கூடியது. உயிரை காப்பது சாத்தியமே.
அனைவரும் இணைந்து தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்குவது சிறந்தது.

‘தற்காலிக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை தேடுவதே தற்கொலையாகும்’

உசாதுணைகள்:
உளவியல்சார் உளவளத்துணை அணுகுமுறை (ரிட்லி ஜயசிங்க)

vidivelli.lk

http://www.kuriyeedu.com

srilankamuslims.lk

m.denakaran.com

– ஆறுமுகம் புவனலோஜினி,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்,
கிளிநொச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *