நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோய்

– R. Kayathiry – Working paper – 24

கொடூரமான ஆபத்தான சம்பவங்கள், பயங்கர அனுபவங்களின் பின் ஏற்படும் குணங்குறிகளை நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு எனலாம்.

மனக்காயம் ஏற்பட்டு படிப்படியாக நாளாந்த செயற்பாட்டை பாதிப்படைய செய்கின்றது தீவீர நெருக்கீடு ஒருவரது மனதைப் பாதிக்கும் பொழுது அவரது நினைவுகள் எண்ணங்கள் என்பனவற்றிலும் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துன்றது. பழையவற்றை மீளவும் நினைவுக்கு கொண்டு வருதல் நாம் அனைவரும் சாதாரணமாக செய்யும் ஒரு செயலே மகிழ்வாக இருந்த சம்பவங்களை மீள நினைவிற்கு கொள்வது ஒரு சந்தோசமான விடையமாகும். அதே போல் இழப்புக்கள் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் நினைத்து அதை மாற்றி நல்ல நிலையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக மேலும் மேலும் முயற்சி எடுத்து வாழ்வை திறம்பட கொண்டு செல்வதற்காகவே நாங்கள் முயன்று கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் இவ்வாறு செய்யாது பழையவற்றை நினைத்து வருந்திக்கொண்டு இருப்பவர்கள் சாதாரண வாழ்கையை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள் இவர்களுக்கு பழைய நினைவுகள் எண்ணங்கள் நடந்த சம்பவங்கள் மீள் நினைவோட்டம் திரும்ப திரும்ப ஏற்படுவது பெரியதொரு பிரச்சனையாக அமைகின்றது.

நடந்த பயங்கர அனுபவம் பற்றி திரும்ப திரும்ப சிந்தித்தல் தொடர்சியாக சிந்தித்தலை நிறுத்த முடியாமலிருத்தல் நிகழ்வுகளின் நினைவுகள் மீள் நினைவோட்டமாக திருப்ப திருப்ப நிகழ்வுதைப் போன்று அனுபவம் பயங்கர நினைவுகள் ஒரு படம் ஓடுவதைப் போல் கண் விழித்து இருக்கும் போதும் மீண்டும் அனுபவிப்பது போல் இருக்கும் கனவுகள் பயங்கர அனுபவங்கள் பற்றியதாகவே இருக்கும்.

பாதிக்கப்பட்ட இவர்கள் பாதிக்கப்பட்ட துன்பமான அனுபவங்களை ஞாபகப்படுத்தும் நிலைமைகளை அல்லது உரையாடல்களை தவிர்த்துக் கொள்ளல் போன்ற னவற்றை கடைப்பிடிப்பர். அத்தோடு இவர்கள் இலகுவில் நிலை தடுமாறி விடுவார்கள். திடீர் சத்தங்களுக்கு திடுக்கிடுவார்கள். அதேபோல் பயம் நடுக்கம் போன்ற உணர்வுகள் காணப்படும். எப்போதும் துயரங்களை சுமந்தவர்கள் போலவே காணப்படுவர். வாழ்கையில் எந்த எதிர்பார்புக்களும் இல்லாத மனநிலை காணப்படும். மற்றவர்களோடு உறவாடலில் ஆர்வமின்மை தாங்களாகவே ஒதுங்கிக் கொள்வார்கள. வாழ்கையில் ஆர்வமின்றி காணப்படுவார்கள். எல்லா நேரங்களிலும் களைப்புடன் இயலாமையாக இருப்பார்கள். நாளாந்த கருமங்களை மேற்கொள்ளவும் சிரமப்படுவார்கள். பாலியல் உறவிலும் ஈடுபட ஆர்வமின்றி இருப்பார்கள். உடலியல் முறைப்பாடுகள் அதிகமாக காணப்படும் மனம் ஒரு நிலையில் இருக்க கடினமாக உணருவார்கள் ஞாபகமறதி ஏற்படும் சிறிய விடயங்களில் எளிதில் கோபமடைவார்கள்.

கொடூரமான நடத்தைகளை வெளிக்காட்டுவார்கள், பகைமை உணர்வு காணப்படும் பயங்கர நிகழ்வில் மற்றவர்கள் இறக்க தான் தப்பியதைப்பற்றி குற்ற உணர்வுடன் இருப்பார்கள், சந்தேகங்கள் ஏற்படும் இவர்கள் அளவிற்கு அதிகமாக போதைப் பொருட்கள் மதுபாவிப்பதில் ஈடுபடுவார்கள். இவர்கள் அதிகமாக தவிர்தல் உணர்வுகளே கொண்டிருப்பார்கள், எந்த உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியாமல் மீள்நினைவோட்டங்கள் வந்து வந்து போகும் நாளாந்த செயற்பாடுகளில் சிக்கல் ஏற்படும். மனவெளுச்சிகளை தவிர்த்துக் கொள்ளுவார்கள், பொறுப்புக்களை தவிர்த்துக் கொள்வார்கள். சூழ்நிலைகளை தவிர்பதை கடைப்பிடிப்பார்கள், அத்தோடு இரவுப் பயங்கரம் இரவுக்கனவுகள் எரிச்சல் நித்திரைகுழப்பம் பீதி குணங்கள் என்பன காணப்படும்.

மற்றவர்களில் தங்கியிருப்பார்கள். தற்கொலை சிந்தனைகள் காணப்படும். குற்றவுணர்வு உடையவர்களாக இருப்பார்கள் சுயமதிப்பீடு குறைந்து காணப்படும். குடும்பபிரிவு விவாகரத்து வீட்டுவன்முறைகள் மதுபோதை துஸ்பிரயோகம் போன்ற சிக்கல்கள் காணப்படும் இதை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். இது போன்ற அறிகுறிகளை உடையவர்களை மனவடு பற்றி கேள்விகளை கேட்டு இனங்காண முடியும் பாதிக்கப்பட்டவருக்கு அதிர்ச்சி தந்த அல்லது பயங்கர அனுபவத்தை கொடுத்த நிகழ்வுகளை பற்றி கூறச்செய்யலாம். நேரடியாக கேள்விகளை கேட்பது நன்று. உதாரணமாக உங்களுக்கு ஏதாவது பயங்கர அனுபவங்கள் ஏற்பட்டால் அதை பற்றி சொல்லமுடியுமா என மறைமுகமாகவும் உயிருக்கு அச்சறுத்தல் யுத்தம் சுனாமி சித்திரவதை கொலை இறப்பு காயம் என்பவற்றை அனுபவித்தீர்களா என நேரடியாகவும் கேட்கலாம். மேற்கூறிய பயங்கர நிகழ்வுகளை இன்னமும் அனுபவிக்கிறீர்களா என கேட்க வேண்டும். அத்தோடு மனவடுவிற்கான மேற்கூறிய குணங்குறிகள் பாதிக்கப்பட்டவரில் இருக்கின்றனவா என நிர்ணயித்தல் வேண்டும். ஊதாரணமாக பாதிக்கப்பட்டவர் தனக்கு கனவு ஏற்படுவதாக கூறின் அக்கனவு எதைப்பற்றியது ஒவ்வொரு நாளும் ஏற்படுகிறதா கிழமைக்கு ஒரு தடைவ ஏற்படுகின்றதா என கேட்டறிதல் வேண்டும். குறிப்பாக கனவில் எவற்றை பற்றி காண்கிறார்கள் என விபரமாக கேட்டல் வேண்டும் அநேகமாக கனவுகள் அவர்கள் அனுபவித்த பயங்கர நிகழ்வுகளைப் பற்றியதாகவே இருக்கும்.

பொதுவாக கனவென்பது நடந்த நிகழ்வை ஜீரணிக்க முடியாத இயற்கை அளித்துள்ள ஒரு வழியாகும் விழிப்பாக உள்ள போது துன்பத்தையும் துயரையும் பதகளிப்பையும் ஏற்படுத்தக் கூடிய பயங்கர ஞாபகங்களையும் நித்திரையின் போது கனவுகள் மூலம் மனதினால் இலகுவாக கையாளக்கூடியதாக இருக்கும் எவ்வாறாயினும் மனவடுவை உண்டாக்கிய நிகழ்வை ஒருவர் நித்திரையில் கூட ஏற்க முடியாததிருப்பின் அது பயங்கரமானதாகவே இருக்கும்.
பாதிக்கப்பட்டவரின் பிரச்சனைக்கு நடந்த சம்பவமே காரணமென தெரிவித்தல் வேண்டும். அதற்கு சேவைநாடியுடன் செவிமடுத்தலுடன் கூடிய ஒத்துணர்வை வழங்கி அவருக்கு ஏற்பட்ட அல்ல பார்வையிட்ட கொடூரமான அனுபவங்களைப் பற்றி கதைக்க வேண்டும். அத்தோடு இயற்கையாக பலரில் இந்த வகையான விளைவுகள் ஏற்படும் என ஆறுதல் கூறவேண்டும். உதவக்கூடிய முறைகள் உள்ளன என்று நம்பிக்கையூட்டவும் வேண்டும். அதிககேள்விகளை கேட்டு அவரை பாதிப்படைய செய்யக் கூடாது. சேவைநாடியை சமயசார பாரம்பரிய உதவிகளை பெற உதவ வேண்டும். சேவைநாடிக்கு தன்னுடைய அனுபவங்களை உதவி யாளருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்பை குறைத்துக் கொள்ள லாம் என கூற வேண்டும். குடும்ப அங்கத்தவர்கள் பிரிந்திருப்பின் அவர்களை ஒன்று சேர்க்கும் முகமாக ஆதரவையும் வழிகாட்டலையும் அறிவுரை களையும் வழங்க வேண்டும்.

மனவடுவிற்கு உட்பட்டவர்களுக்கு சாந்த வழிமுறைப்பயிற்சிகள் ஓய்வு ஓய்வுநேர செயற்பாடுகள் பெரிதும் உதவியளிக்கின்றது. மனவடு காரணமாக ஒருவருக்கு ஏற்பட்ட சமூக மற்றும் வேலை பிரச்சனைகளை தீர்க உதவ வேண்டும். அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியை பெற்று குடும்பத்தை புணரமைக்கலாம்.

நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி இருப்பார் என அறிந்து கொள்வோம்.
மல்லிகா, வயது 45, பெண் வன்னி மாவட்டத்தை சேர்ந்தவர் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். திருமணமாகி 3 பிள்ளைகள் கணவன் 50 வயது. நெருக்கீட்டு நிகழ்விற்கு முன்பு மல்லிகா தனது கணவருடன் சேர்ந்து வீட்டுத் தோட்டத்தை மேற்கொண்டு வந்தனர். 3 மாதத்திற்கு முன்பு அவள் தனது கிராமத்தை விட்டு தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்து விட்டார். கிட்டத்தட்ட 2500 மேற்பட்ட உறவினர்கள் நண்பர்கள் இந்த நெருக்கீட்டினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நெருக்கீட்டு நிகழ்வின் போது தனக்கு நடந்த துன்பங்களை விபரித்தார். அத்தோடு தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் எவ்வாறு தப்பினார் எனவும் விபரித்தார் அதன் பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்ட பின்னர் நலன்புரி முகாமிற்கு குடும்ப உறவினருடன் இணைக்கப்பட்டார். இன்று வரையும் அவர் நலன்புரி முகாமில் தான் வாழ்ந்து வருகின்றார். இந்த நிகழ்விற்கு பின் அவருடைய கணவர் மது அருந்துபவராகவும் வன்முறையை பிரயோகிப்பவராகவும் மாறியுள்ளார்.

மல்லிகா உளவளத்துணையாளரிடம் வரும் போது அவருக்கு தூக்கமின்மை, பயங்கரகனவு, உதவியற்ற நிலை, மீள்நினைவோட்டம், எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமை, களைப்பு, தனிமை, பயனற்றநிலை, சுவாசிப்பது சிரமம், உடல் முழுவதும் நோ அத்தோடு தான் அந்த அனர்த்தத்திலிருந்து ஏன் தப்பியதாகவும் குற்றவுணர் வுடன் கண்ணீர் விட்டு அழுகின்றார் தான் எவ்வளவு கோபமாகவும் கவலையாகவம் இருப்பதாகவும் கூறினார்.

மனவடுவிற்குட்பட்ட சகலருக்கும் மருத்துவ உதவி தேவையென்றில்லை. எனினும் சிலருக்கு மருந்து, மாத்திரைகள் நன்மையளிக்கின்றன. நித்திரையின்மை பயங்கர கனவு, மனச்சோர்வு என்பனவற்றை மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். அத்து டன் மருந்துகள் மூலம் மீளனுபவங்களையும் கட்டுப்படுத்தலாம். தகுந்த வைத்திய ஆலோசனைப்படியே இவற்றை எடுத்தல் வேண்டும்.

சிறப்பு சிகிச்சை
கொடூரமான மனவடுவிற்குள்ளானவருக்கான அறிவாற்றல் நடத்தை சிகிச்சை. துன்பமான மனவுணர்சிகளை அனுபவித்துள்ள அநேகமான மக்கள் வாழுமிடத்தில் உதாரணமாக சுனாமி போர் போன்ற அனர்த்தங்களுக்கு பிறகு அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குழுவாக அல்லது சமூகமட்டத்தில் உதவியளிப்பது பொருத்த மானதாகும். ஆனால் சில சமயம் தனிப்பட்ட உதவி முறைகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக ஒருவர் ஏற்கனவே குழுவில் உறுப்பினராக இருந்து பல கூட்டங்களில் பின்னரும் பாரிய முறைப்பாடுகளை கொண்டிருத்தல் அல்லது வேறு சிலர் மற்றவர்களின் முன் கதைக்கத் தயங்குவர்;;. அல்லது கூட்டங்களில் பங்குபற்ற பயப்படுவர் அவர்களுக்கு தனியாகப் பரிகாரங்களை தொடங்குதல் சிறந்ததாகும். சமுதாயத்தில் ஒருவரின் அந்தஸ்து அல்லது அப்பிரதேசத்தில் இராணுவ அரசியல் இயக்கங்களின் பிரசன்னம் கொடூர சித்திரவதைச் சம்பவங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதைச் சாத்தியமற்ற தாக்கிவடும். எனவே தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக உதவுவது மிகச் சிறந்ததாகும்.

இப்பகுதியில் கொடூர மனவடுவிற்குள்ளான தனிப்பட்டவர்களுக்கு உதவும் படிப் படியான அணுகுமுறையை பிரயோகிக்கலாம்.

பாதிக்கப்பட்டவருடன் நம்பிக்கை உறவை ஏற்படுத்தல்
முதலாவது சந்திப்பில் பாதிக்கப்பட்டவரைச் சௌகரியமாக இருக்கசெய்தல் வேண்டும். மற்றவர்களால் குழப்பமடையாத அமைதியான இடத்தை தெரிவு செய்தல். அவர்கள் சொல்லுவதைக் முழுக்கவனத்துடன் அவதானமாக கேட்க வேண்டும். இப்படியான சூழ்நிலையை சேவைநாடிக்கு மனதை திறந்து கதைக்க கூடியதாக இருக்கும். முதலில் நடந்தவற்றை கூறவிடல் வேண்டும். அவர்களை முழுக்கதையையும் கூற ஊக்கப்படுத்தல் வேண்டும். அவர்கள் தாம் செய்ததை அந்த நேரத்தில் அனுபவித்த உளரீதியான உடலியல் ரீதியான உணர்வுகளை அந்த சம்பவத்தின் வௌ;வேறு சந்தர்பங்களில் என்னென்ன நினைத்தார்கள் என்பதை வெளிப்படுத்த உதவவேண்டும். பாதிக்கப்பட்டவரின் தன்மைக்கேற்ப தேவைப்படும் காலம் வரை சந்திக்க ஒழுங்கு செய்தல் வேண்டும்.

பொதுவாக நெருக்கீடு பற்றிய அறிவுரைகளை வழங்கி சாந்த வழிமுறைகளை பயிற்றுவித்தல்
நெருக்கீடு என்றால் என்ன என்பது பற்றியும் நெருக்கீட்டை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர். என்பது பற்றியும் விளக்குதல் வேண்டும். இதற்கு உதவியாக வீட்டில் வாசிப்பதற்கு பிரசுரங்களை கொடுக்கலாம். சாந்தவழிமுறைகளை எவ்விதம் செய்வது என கற்பித்தல் வேண்டும். சாந்த வழிமுறையைத் தாமாகவே செய்யப் பழகுவதற்கு பல அமர்வுகளில் தேவைப்படும். சாந்த வழிமுறைகளை ஒரு நாளைக்கு இரு தடவைகள் வீட்டிலேயே செய்யச் சொல்லுதல் வேண்டும்.

மனவடுவை ஏற்படுத்திய நெருக்கீடுகளைப் பற்றி கேட்டறிதல்
பாதிக்கப்பட்டவரை என்ன நடந்தது என முழுக்கதையையும் விபரமாக கூறச் செய்தல் வேண்டும். மிகவும் கடினமான காலம் எது என கேட்டல் வேண்டும். அனேகமானவர்கள் இரண்டு அல்லது மூன்று கடினமான அனுபவங்களை குறிப்பிடுவர். எழுதக் கூடியவராக இருந்தால் தனது கதையை வீட்டு வேலையாக கொண்டுவர வைக்கலாம்.

அடுத்ததாக அவர் கூறிய அல்லது எழுதிய முதலாவது கடினமான காலத்தை பற்றி ஆராயவும் அக்காலத்தில் பதற்றமூட்டும் அல்லது துன்பமூட்டும் சரந்தர்பங்கள் இருந்தனவா என கேட்டறிதல் வேண்டும் பாதிக்கப்பபட்டவர் இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் அல்லது பல சந்தர்பங்களை குறிப்பிடலாம். இச் சந்தர்பங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் கூறுதல் அல்லது எழுதுதல் வேண்டும். உதாரணமாக அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் உடலில் என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள்? நீங்கள் என்ன நினைத்தீர்கள்? நீங்கள் எதைக் கேட்டீர்கள்? இதை விட வேறு எதையாவது உணர்ந்தீர்களா? அந்த நேரத்தில் நீங்கள் பயந்தீர்களா? அல்லது கோபமுற்றீர்களா? வலுவிழந்து போனீர்களா? என விபரமாக கேட்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவருடைய வாழ்கையின் பயங்கர அனுபவங்களின் தாக்கத்தைக் குறைத்தல்
இந்த சந்திப்பின் போது பாதிக்கப்பட்டவரிடம் நீங்கள் முன்னர் கூறிய அல்லது எழுதிய காலங்களுக்கு செல்கின்றீர்கள் என்பதைக் கூற வேண்டும். இது இலகுவானதல்ல இது சீழ்கட்டி குணமடைவது போன்றது சீழை வெளியே எடுக்கும் போது நோ ஏற்படும் ஆனால் பின்னர் சுகமாகவிருக்கும் சீழ்கட்டியும் மறைந்துவிடும் என புரிவது போல கூற வேண்டும். அனுபவங்களை ஞாபகப்படுத்தும் போது அதனை அவரால் தாங்க முடியாதிருப்பின் இடையே சிறிய சிறிய இடைவெளிகளை விட வேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் ஏற்கனவே கற்ற சுவாசப்பயிற்சி போன்ற தளர்வுப்பயிற்சிகளை மேற்கொள்ளம் படி கேட்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் மீள ஞாபகபடுத்தி கதைத்து முடித்த பின்பு அவருடைய கடினமான அனுபவத்தின் பாதிப்புக்களில் சற்று கூடிய கடினத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை எடுத்து முன்னர் செய்தது போல செய்ய வேண்டும்.

காலக்கிரமத்தில் நடந்த நெருக்கீட்டின் அவஸ்தையை முகங்கொடுத்துப் பழகி அதிலிருந்து விடுபடும் நிலைக்கு கொண்டு வர உதவ வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் தன்னுடைய கடினமான கடந்த காலத்தை வெற்றி கொண்ட முறை பற்றி பாராட்ட வேண்டும். நல்ல நிலைமை படிப்படியாகத்தான் வரும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும். சில நேரம் பாதிக்கப்பட்டவர் எதிர்காலத்தில் மீண்டும் குழப்பத்தை உணரலாம். என்பதை விபரித்தல் வேண்டும். மீளவும் பாதிப்புக்கள் உருவாகின் அவை வெளியொருவரின் உதவியின்றி தானாகவே பெரும்பாலும் மறைந்து விடும் என்பதைக் கூற வேண்டும். மீள உருவாகிய தாக்கத்திலிருந்து விடுபட சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் எடுக்கும் என்பதை தெரிவித்தல் வேண்டும்.

உசாத்துணைகள்:
1. தமிழ் சமூதயத்தில் உளநலம் (2010), தயா சோமசுந்தரம், சா.சிவயோகன், சந்திகம் வெளியீடு.
2. https://www.nimh.nih.gov/health/topics/post-traumatic-stress-disorder-ptsd/index.shtml
3. https://www.adaa.org/understanding-anxiety/posttraumatic-stress-disorder-ptsd
4. https://en.wikipedia.org/wiki/Posttraumatic_stress_disorder

– R.காயத்திரி, 
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம், கிளிநொச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *