மனநோயும் அதன் அறிகுறிகளும்

– சி.நிஷாந்தன் – Working paper – 26

அறிமுகம்
‘மனநலம் மன்உயிர்க் காக்கும் இனநலம்
எல்லாப் புகழும் தரும்’ – குறள்

மனநோய் என்பது மனதின் நலன் குறையும் போது மனிதனுக்கு பலவிதமான நிலைகுலைவுகள் ஏற்படுகின்றன. நலக்குறைவின் அளவுக்கேற்ப மனநோய் உண்டாகின்றது. அதாவது உடலமைப்பு, பாரம்பரியம், குடும்பச் சூழ்நிலை, சமூக கலாச்சார பொருளாதார நிலைகள், பண்பியல் தொகுப்பு மற்றும் மனவளர்ச்சி போன்றவற்றில் குறைபாடுகள் உண்டாகும் போது மனநோய் ஏற்படுகிறது.

அதாவது மேற்குறிப்பிட்ட காரணங்கள் தனித்து அல்லது இணைந்து செயல்படும்போது பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன. இப் பிரச்சனைகளை மனிதன் தீர்க்க அல்லது சமாளிக்க முயலும்போது சில சமயங்களில் தோல்வியடைய நோடுகிறது. இத்தகைய தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஒருவருக்கொருவர் வேறுபட்டு அமைகிறது. அதாவது வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியான சம்பவம் கூட சிலரை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் சிறு ஏமாற்றம் அல்லது அதிர்ச்சி சிலரை மிகவும் பாதிக்கிறது. எனவே ஒவ்வொருவருடைய மன உறிதியைப் பொறுத்தும், பண்பியல் தொகுப்பை பொறுத்தும் அவரது மனநலம் அமைகிறது.

எனவே மனிதன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அல்லது இணைந்து செயலாற்றத் தயாராக இருக்க வேண்டும். எனவேதான் அவனுக்கு வெற்றி கிடைக்கிறது. ஆயினும் இத்தகைய மனப்பாங்கு இல்லாதவர்கள் தோல்வியை தழுவ நேரிடுகிறது. இதனால் எண்ணத்திலும் உணர்ச்சியிலும் செயலிலும் மாறுபாடுகள் உண்டாகி மனம் குழம்பி நாளடைவில் மனநோய்க்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

‘துன்புறும் உறுப்புக்களின் அழுகைக் குரலே
நோயின் அறிகுறி எனப்படுகிறது’

மனநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சிந்னை, கண்ணோட்டம், உணர்ச்சி, செயலாற்றல், நினைவாற்றல், பண்பியல் தொகுப்பு முதலியவற்றால் ஏற்படுத் குறைபாடாகவே தோன்றும். இவ் அறிகுறிகளை குடும்பத்தார் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வியாதிஸ்தரை உரிய மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் சென்று சரியான சிகிச்சை அளிக்க பெரிதும் உதவும்.

சிந்தனையில் குழப்பம் (Thought Disturbance)
மனநோய் உள்ளவரின் சிந்தனையானது அவரின் அறிவிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமற்றதாக இருக்கும். பெரும்பாலும் இவர்கள் கற்பனை உலகில் சஞ்கரிப்பர். அதாவது நிறைவோறாத ஆசைகளை தம் கற்பனைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வர். இவர்களது பேச்சுவழக்கில் மாறுபாடு காணப்படும். அதாவது ஒரு விடயத்தை சுற்றிவளைத்து பேசுவர். தொடர்பில்லாத பேச்சுக்கள்,சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வர், பல விடயங்கள் பேச்சில் கலந்திருக்கும். இதைவிட ஒரு சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று இன்னொரு சம்பவத்தைப்பற்றி பேசுவர். அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிக வேகமும் இரைச்சலும் இருக்கும்.

இதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். சிலசமயம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பேச்சை நிறுத்தி விடுவர் இதற்கு காரணம் கோட்டால் சரியான பதில் வராது, மௌனமாயிருப்பர். பின்பு திரும்ப திரும்ப கோட்கும் போதே ஓரிரு வார்த்தைகளில் எந்தவித உயர்ச்சியுமின்றி பதில் கூறுவர். இவர்கள் வெறித்த பார்வை உடையவர்களாகவும் இருப்பர். ஞாபக மறதியும், பிறர் கூறும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தொரிந்து கொள்வதில் குழப்பமும், ஒரு பொருளின் பெயரை சொல்வதில் சிரமமும் இருக்கும்.

தவறான நம்பிக்கைகள் (Delusions)
சிந்தனை குழப்பத்தில் தவறான நம்பிக்கையானது மிகவும் முக்கியமான விடயமாகும். இதுவே நோயாளியையும் ஏனையோரையும் மிகவும் சிரமத்துக்குள்ளாக்கும் அறிகுறியாகும். இத்தகைய நம்பிக்கை நோயாளியின் கல்வியறிவு, கலாச்சாரத்துக்கு பொருந்தாமல் இருக்கும். இந்த நம்பிக்கை தவறானது என காரணங்களுடன் விளக்கிக்கூறினாலும் நோயாளியின் மனதிலிருந்து அதை அகற்ற முடியாது.

பிறர் செய்யும் எந்த காரியமும் தன்னை துன்புறுத்த அல்லது கொலை செய்ய என நம்புவது (persecutory Delusion) அதாவது தன்னை சுற்றியுள்ள ஒவ்வொரு அங்கமும் தனக்கு கேடு உண்டாக்கவே இருக்கிறது என கருதுவது தவறான நம்பிக்கையாகும். தான் மிகவும் சக்திவாய்ந்தவன் என்றும். தன்னால் எதையும் சாதிகக முடியும் என்று சொல்வது தவறான உயர்வெண்ணமாகும் (Grandiose Delusion). உதாரணமாக தான் நாட்டின் ஜனாதிபதி என கூறுவர். பிறர் தன்னை அடக்கி ஆழ்வது போலவும், ( Delusion of Control) தன்னைப்பற்றி மற்றவர்கள் அவதூறாகப் போசுவதாகவும் கெட்ட நோக்குடன் பார்ப்பதாகவும் கூறுவர். (Delusion of  reference) மேலும் சிலர் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை எவரோ கட்டுப்படுத்துவதாகவும், கருவிகள் மூலம் கவர்வதாகவும், அவற்றை வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலிபரப்புவதாகவும் எண்ணுவர். வேண்டாத எண்ணங்களை சிலர் தங்கள் மனதில் திணிப்பதாகவும் கூறுவர். மற்றும் சிலர் தமக்கு புற்றுநோய், காசநோய், பால்வினை நோய்கள் போன்ற பயங்கரமான நோய்கள் இருப்பதாக நம்பி துன்புறுவர் (Delusion of illness). சிலர் உலகத்தில் தாம் மிகவும் மோசமானவர்கள், கொடும் பாவங்கள் செய்தவர்கள் என்று நம்புவர் (Delusion of sin and guilt). சிலர் தாங்கள் இறந்துவிட்டதாகவும் தம்மை சுற்றியுள்ள எல்லாம் உயிரற்றுப் போய்விட்டதாகவும், செயல் இழந்து போய்விட்டதாகவும் நம்புவர் (Nihilistic Delusion). இதைவிட தனது மனைவியோ அல்லது காதலியோ நடத்தை கெட்டவர் என்று கூறுவர். தன் உணவில் விஷம் கலந்துள்ளது என்றும், எதிரிகள் தனக்கு மந்திரம், செய்வினைகள் செய்து தன்னை கொல்வதற்கு முயற்சிப்பதாகவும் கூறுவர். அளவுக்கதிகமான சந்தேகமுடையவர்களாக நடந்துகொள்வர் (Paranoid Delusion) இதனால் மிகவும் உணர்ச்சி வசப்படுவர்.

சிலர் அர்த்தமற்ற பயம் கொள்ளுவர் (Phobia). இத்தகைய பயம் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் இருக்கும். உதாரணமாக உயர்ந்த மலை, மாடிக்கட்டடம், திறந்த சமவெளி, இருட்டு, தண்ணீர், தனியறையில் இருத்தல் போன்றவற்றிற்கு பயப்பிடுவர். இதைவிட புதிய மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றிற்கும் பயப்பிடுவர். ஏதாவது ஒரு விஷயத்திற்கும் தேவையற்ற பயம் கொள்ளுதலும் மனநோயின் முக்கிய அறிகுறியாகும்.

இதை விட சிலருக்கு மறக்கமுடியாதளவுக்கு சில கெட்ட எண்ணங்களும், உணர்ச்சிகளும் (Obsession) மனதில் அடிக்கடி ஏற்படுவதுமுண்டு. இவ் எண்ணங்கள் தவறானது என நோயாளிக்கு தெரிந்தாலும் அவ் எண்ணங்கள் சக்தி வாய்ந்ததால் அவற்றை மாற்றமுடியாதுள்ளது. இதனால் மனதில் மிகவும் சஞ்சலம் ஏற்படுவதாக கூறுவர்.

உதாரணமாக மிகவும் நெருங்கிய ஒருவரை அதாவது தனது குழந்தையின் கழுத்தையே நெரித்து கொன்று விட வேண்டும் என்ற எண்ணம் தாயின் மனதில் ஏற்படலாம். இப் பயங்கரமான எண்ணத்தால் தோன்றும் மன உளைச்சலைத் தாங்கவும். அதன் கோரப் பிடிக்கு பலியாகமல் தடுக்கவும் தனது மனதை வேறு ஒரு திசையில் திருப்ப ஏதாவது ஒரு செயலில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. மணிக்கனக்கில் கைகளை கழுவுதல், ஒரு செயலை திரும்பதிரும்ப அர்த்தமில்லாமல் செய்து கொண்டிருப்பது போன்றவை இத்தகைய செயல்களுக்கு உதாரணமாகும். சிலர் தம் உடலின் சில உறுப்புக்களில் நோய் இருப்பதாக எண்ணி (Hypochondriacs) ஒவ்வொரு நாளும் வெ வ்வேறு விதமான அறிகுறிகளைக் கூறுவர்.

மேற்கூறிய எல்லாம் மனிதனின் சிந்தனைக் குழப்பத்தால் தோன்றும் மிக முக்கியமான மனநோய் அறிகுறிகளாகும். இத்தகைய குழப்பங்கள் மனிதனது மனதிலே உருவாகி, வளர்ந்து, பின்பு வெளிப்படுகின்றன. ஆயினும் மனநோயாளி இதை உணர்வதில்லை.

உணர்ச்சி மாற்றங்கள் (Disturbances in Mood)
நவரச உணர்ச்சி மாற்றங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் சாதாரணமாக நிகழ்வதுண்டு. அவை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி ஒரு நிலைப்பட்டிருக்கும். ஆனால் மனநோயாளிகளை பொறுத்த வரையில் அவ்வித உணர்ச்சிகள் அதிகமாகவோ குறைந்தோ அல்லது அந்த சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் சற்றும் பொருந்தாமலோ இருக்கும். அதாவது அழவேண்டிய நேரத்தில் சிரிப்பதும், சிரிக்க வேண்டிய நேரத்தில் அழுவதுமான செயல்கள், ஏதாவது ஒரு காரணத்தினால் கோபமோ கவலையோ கொள்ளும் ஒருவர் அந்த சூழ்நிலை மாறியவுடன் கோபதாபம் விலகி பழைய சாதாரண நிலைக்கு வந்துவிடுகிறார். ஆனால் மனநோயாளியின் நிலமை அப்படியல்ல அவருக்கு ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் வெகுநாள்வரை சூழ்நிலை மாறினாலும் மாறாவிட்டாலும் அப்படியே இருக்கும்.

அறிவுக்கும் சூழ்நிலைக்கும் பொருந்தாத சாதாரண ஒரு விடயத்துக்கு கூட மனநோய்க்கு உள்ளாநோர் சிலர் மிகவும் சந்தோஷமடைவர். அதுமட்டுமல்லாமல் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையும், உட்சாகமும் கொண்டு அங்குமிங்கும் சுற்றியலைந்தும் பேசியும் திரிவர். தங்களைப்பற்றி மிகவும் பெருமையாகவும் மிகுந்த பலமுடையவர்கள் என்றும் எண்ணி அதை ஏனையோர்களிடம் வெளிப்படுத்துவர். மனித சமுதாயத்தை காப்பாற்ற வந்த மகான்கள் போல் நடந்துகொள்வதும், பேசுவதும் இவர்களது வழக்கமாயிருக்கும்.

சிலர் ஆழ்ந்த கவலையும் மனத்தளர்வும் கொண்டு தங்கள் வாழ்க்கை கடலில் மூழ்கிய கப்பல் போல் ஆகிவிட்டது என்று கூறி மீளமுடியாத துயரில் இருப்பர் தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் இத்தகையவர்களிடம் அதிகமாகக் காணப்படும். சிலரிடம் அளவுக்கதிகமான பொருத்தமற்ற பயம், பதட்டம், பரபரப்பு முதலியன காணப்படும். அல்லது எவ்வித உணர்ச்சியுமில்லாத நிலையில் சிலர் காணப்படுவர். சிலர் ஒரே நேரத்தில் வெறுப்பும் விருப்பும் கலந்த உணர்ச்சிகளை கொண்டிருப்பர். இதைதவிர சில நோயாளிகள் தங்கள் உடலின் உறுப்புக்களில் சில சுருங்கி விட்டதாகவும் அல்லது பெருத்துவிட்டதாகவும் எண்ணி கவலைப்படுவர். அளவுக்கு மிஞ்சிய கோபம், வெறி, பெறாமை, சந்தேக உணர்ச்சிகளும் சிலருக்கு தோன்றும். இவ்விதமான உணர்ச்சிகளால் உந்தப்படும் நோயாளிகள் மிக கொடூரமாக நடந்து கொள்வர் சில நேரங்களில் கொலையும் செய்து விடுவர். மேலே கூறப்பட்ட பலவகை உணர்ச்சி மாற்றங்களில் ஏதாவது சிலவற்றை மனநோயிலே காணலாம்.

கண்ணோட்டத்தில் மாறுபாடு – மாயப் புலத்தோற்றம் (Perceptual disorder – Hallucinations)
இது பலவகைப்டும். உண்மையான புறத்தூண்டுதல் எதுவும் இல்லாதபோது அப்படி இருப்பதாக ஜம்பலன்களாலும் உணர்ந்து நம்புவதை இது குறிக்கும். கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஜம்பொறிகளில் நோயாளி இல்லாததொன்றை இருப்பதாக உணர்ந்து அதை நம்பி கூறுகின்றார். அவ்வுணர்வால் மிகவும் அவதிப்படுகின்றார். அவ்வுணர்வு தவறானது என கூறினாலும் அவரால் நம்பமுடிவதில்லை. புற உலகிலிருந்து இவ்வித தூண்டுதல் வருவதாக மனநோயாளி கூறினாலும் கூட உண்மையில் அவரின் ஆழ்மனதில் இருந்துதான் இவை உருவாகின்றன.

மாயத் தோற்றம் (Visual Hallucination)
கண்ணெதிரே எந்த பொருளோ, மனிதனோ, மிருகமோ இல்லாத நிலையிலும் மனநோயாளி தனக்குமுன் முருகன் வந்து தரிசனம் தருவதாகவோ, இயேசுநாதர் வந்து நிற்பதாகவோ அல்லது சிங்கம், புலி வருவதாக கூறுவதே மாயத் தோற்றமாகும். இதை இவர்கள் சொல்லும்போது உண்மை போல் தோன்றும். எனினும் இது உண்மையல்ல. ஆனால் இவர்களின் கண்களில் அவ்வாறு தோன்றுகிறது. இதற்கும் மருட்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு யாதெனில் மருட்சியில் பொருள் இருக்கும் அதை விளங்கிக்கொள்வதில் தான் தவறு இருக்கும். உதாரணமாக தூரத்தில் இருக்கும் கயிற்றை பாம்பு என எண்ணுதல் மருட்ச்சி. ஆனால் முன்னால் எதுவும் இல்லாதபோது ‘அதோ பாம்பு வருகிறது’ என்பது மாயத்தோற்றம் ஆகும்.

மாயஒலி (Auditory Hallucination)
இவ் ஒலியில் இருவகையுண்டு. அர்த்தமற்ற பல்வகை ஒலிகள், மனிதக் குரல்கள். அதாவது யாரும் அருகில் இல்லாத போதும் யாரே பேசுவதுபோல் நோயாளிக்கு கேட்ககும். சுpல சமயம் அக்குரல் மிக தெளிவாக இருக்கும். அதாவது இதை செய் அதை செய்யாதே என்று கட்டளையிடும். எனவே நோயாளி இந்த கட்டளைக்கு கட்டுப்பட்டோ அல்லது உதாசீனப்படுத்தி நடந்துகொள்ளலாம். சில சமயம் அந்தக்குரல்கள் நோயாளியின் செயற்பாடுகள் பற்றி குறை கூறுவதாகவே அல்லது புகழ்வதாகவும், விமர்சனம் செய்வதாகவும், நம்பிக்கையூட்டியும், திட்டியும், பாலுணர்ச்சி பற்றியும் குரல்கள் பேசுவதாகவும் சிலர் கூறுவர். சிலர் இக்குரல்கள் பற்றி புரிந்துகொள்ளமுடியவில்லை என்றும் கூறுவர்.

எனினும் சிலர் தங்கள் கவனத்தை வேறு எதிலாவது செலுத்தி மறக்க முயல்வர். ஆனால் சிலர் இக்குரல் தொடர்ச்சியாக கேட்பதால் அவர்களது நாளாந்த வாழ்வில் எதையும் செய்யமுடியாது சிரமப்படுவர். திடீரென உண்டாகும் இவ்வித போலிக் குரலால் பதற்றமும், பயமும், பரபரப்பும் அடைந்து ஆழ்ந்த கவலைக்குள்ளாவர். சிலர் இதை பொறுக்க முடியாமல் தற்கொலையும் செய்ய முயற்சிப்பர். அல்லது குரல்களின் கட்டளைக்கு அடிபணிந்து கொலையும் செய்ய முயற்சிப்பர். எனவே இவ்விதமாக கேட்கும் குரலுக்கு காரணம் மந்திர மாயம் அல்லது பேய் பிசாசுகளின் சேட்டை என்று கூறுவர். சிலர் இதை தொலைக்காட்சி, வானொலி, மின்காந்த அலைகள் போன்றவ மூலம் தங்களை துன்புறுத்த அனுப்பப்படும் செய்திகளாக கருதுவர். ஆபத்து என்னவெனில் தமக்கு பக்கத்திலுள்ள ஒருவர் கேவலமாக பேசுகிறார் என்று எண்ணி அவர்மீது பாய்ந்து அடிப்பது.

போலி வாசனைகள் (Olfactory Hallucination)
இவைகள் பலவித இரத்த வாடகை, அழுகிய பொருட்களின் வாசனை அல்லது மலர்களின் வாசனை இவற்றில் ஏதாவது ஒன்றை நோயாளி நுகர்வதாக கூறுவர். சிலர் தங்களை யாரே ஒருவர் நச்சுக்காற்றை செலுத்தி கொல்ல முயல்வதாகவும் கூறுவர். சிலர் எரியும் றபர் , பெயிண்ட், கற்பூரம் போன்றவற்றின் வாசனை வருவதாக கூறுவர். ஆனால் இத்தகைய வாசனையை ஏற்படுத்தும் பொருடகள் எதுவும் சுற்றுப்புறத்தில் இருக்காது.

போலிச் சுவை (Gustatory Hallucination)
வாயில் எவ்வித உணவுப் பொருளும் இல்லாத நிலையில் சிலருக்கு இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற சுவையுணர்வுகள் திடீரெனத் தோன்றுவதாக கூறுவர். இதுவே போலிச் சுவையாகும். பெரும்பாலும் மூளைப்பாதிப்பால் ஏற்படும் சில நோய்களால் தான் இவ்வுணர்வுகள் ஏற்படுகின்றன.

போலித் தொடு உணர்ச்சி (Tactile  Hallucination)
அதாவது சிலருக்கு எறும்புகளும், பூச்சிகளும் உடம்பில் ஊர்வதாக தோன்றும். சிறு மிருகங்கள் உடம்பில் அங்குமிங்கும் ஊர்ந்து செல்வதாக சிலர் கூறுவர். குறிப்பாக மதுப்பழக்கத்தினால் ஏற்படும் முதிர்மனநோயில் இவ் அறிகுறிகள் ஏற்படும். ஆண்களாயின் அவர்களை யாரோ காம உணர்ச்சிக்கு ஆளாக்குவதாகவும், அவர்களது இந்திரியத்தை அவர்களிடமிருந்து பரித்து எடுப்பதாகவும் கூறுவர். பெண்களாயின் தங்களை யாரோ கற்பழிப்பதாகவும், ஆண் குறியை தங்களது உறுப்பினுள் நிரந்தரமாக வைத்துவிட்டதாகவும் கூறுவர். சிலர் தொண்டையில் கட்டி இருந்து அடைத்துக் கொண்டிருப்பதாகவோ, அல்லது யாரோ கத்தியை தொண்டைக்குள் செருகி விட்டதாகவோ கூறுவர்.

ஞாபகசக்திக் குறைகள் (Memory disturbances)
மனநோயில் சிலருக்கு ஞாபகசக்தி சிறிதளவோ அல்லது முழுமையாக குறைவடைதல் உண்டு. இவர்களுக்கு ஒரு விடயத்தை சரியாக புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். சிலர் தங்கள் ஞாபகமறதியால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப தம்மையறியாமலே புனைந்துரைப்பர் (Confabulation) அதாவது சிலர் நன்றாக பழகிய மனிதர்களையும், இடத்தையும் புதிதாக பார்ப்பதுபோலவே அல்லது பழக்கமற்ற மனிதர்களையும், இடத்தையும் ஏற்கனவே தெரிந்தது போலவே உணர்வர். சிலருக்கு சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் யாவும் ஞாபகத்தில் வராமலிருக்கும்.

செயல் மாற்றங்கள் (Disturbance in Activity)
பேசும்போது சொன்ன வார்த்தை அல்லது விடயத்தை திரும்ப திரும்ப கூறுதல், ஒருவர் செய்வதை அப்படியே திரும்ப செய்தல், சிலைபோல் இருந்த இடத்திலேயே உடல் விறைப்போடு நீண்டநேரம் இருத்தல், சென்னதை அப்படியே செய்தல், சொல்வதற்கு எதிராக நடத்தல் ஆகியன மனநோய் உள்ளவரிடம் காணப்படும் செயல்மாற்றங்களாகும். இதைவிட பரபரப்பு, பொருட்களை உடைத்தல், தூக்கத்தில் நடத்தல், பொருத்தமற்ற காரியங்களை செய்தல் என்பனவும் செயல்மாற்றங்களாகும். உதாரணமாக அடிக்கடி கைகழுவுதல்.

சுய உணர்வில் மாற்றங்கள் (Disturbances Consciousness)
நோயாளிக்கு தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் உணர்ந்து கொள்வதில் ஏற்படும் குழப்பமாகும். இம் மாறுதலை நான்கு வகைப்படுத்தலாம்.

01. சிறிதளவு மனக்குழப்பம்
மனஇயக்கம் குறைந்து இருக்கும், சிந்திக்கும் ஆற்றல் குறைதல், புரிதலில் தாமதம், சிறு காரியம் செய்ததும் உடலும், மனமும் தளர்ச்சி அடைதல். நோயாளிக்கு மாறுபட்ட, தெளிவான மனநிலையும் மாறி மாறி காணப்படும்.

02. மிதமான மனக்குழப்பம்
இன்நிலையில் சுற்றுப்புறமும், சூழ்நிலையும் மறத்தல். காலத்தை சரிவர உணராமை. இடம், மனிதர்களை அடையாளம் காண்பதில் சிரமம். சுருக்கமாக பதிலழிப்பர்.

03. அதிகளவு மனக்குழப்பம்
இரண்டாம் நிலையின் அறிகுறிகள் யாவும் இந்நிலையிலும் காணப்படும். அத்துடன் ஆபத்தான போலித் தோற்றம், ஒலிகள் தோன்றுவதால் பயந்து வீட்டை விட்டு ஓட முயல்வர். எப்பொழுதும் பதட்டத்துடனும், பரபரப்புடனும் இருப்பர். இப்படிப்பட்டவர்ளை படுக்க, உட்கார வைக்க முயன்றால் முயற்சிப்பவரை தாக்க முற்படுவர். இந்நிலையே ஜன்னி எனப்படும்.

04. சுய உணர்வு அற்றுப்போதல்
நோயாளியின் சுய உணர்வு மோசமடைவதால் எல்லா செயற்பாடுகளும் அடக்கத்திலிருக்கும். பேச்சு நின்று முனகல் மட்டும் இருக்கும். தூண்டுதல்களுக்கு பதில் இல்லாத நிலையை அடைவர். இந்நிலையிலிருந்து நினைவு திரும்பாமல் நேயாளி மரிக்கவும் வாய்ப்புண்டு.

தூக்கக் குறைவு (Sleep Disturbances)
மனநோய் ஆரம்பிக்கும் போது பலவித தூக்கக் குறைபாடுகள் ஏற்படுவது மிகவும் முக்கிய அறிகுறியாகும். தூக்கமின்மை, அடிக்கடி தூக்கத்திலிருந்து எழும்புதல், அளவுக்கு அதிகமான தூக்கம், இரவில் அதிக நேரம் தூக்கமின்றி இருத்தல், அதிகாலையில் எழும்புதல் என்பன தூக்கக் குறைபாடாகும்.

அறிவிலும், பண்பியல் தொகுப்பிலும் குறைகள் (Disturbances in intelligence and personality)
கவனம், சூழ்நிலையை புரிந்துகொள்ளும் ஆற்றல், மதிநுட்பம், கற்றுக்கொள்ளுதல், மனதை ஒரு நிலைப்படுத்தல் போன்றவை இவற்றில் அடங்கும். இவை அனைத்துமோ அல்லது சில பகுதிகளோ மூளைச் சீரழிவால் (dementia) ஏற்படுகின்றன.

அதாவது மனநோயாளியிடம் ஒரு பொருளைய்பற்றி அறிந்து கொள்வதிலும், ஞாபகத்தில் கொண்டு வருவதிலும், ஒரு செயல்பாட்டை திட்டமிட்டு செயற்படுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். அத்துடன் சுகாதாரம், உணவுப் பழக்க வழக்கம், உடை அணிதல், பிறரிடம் பழகும் விதம் போன்றவற்றிலும் இவர்களிடம் குறைபாடு காணப்படும்.

முடிவுரை
மனநோயின் அறிகுறிகளைப்பற்றி விளக்கும் போது சில அறிகுறிகளை மீண்டும் மீண்டும் கூறியிருப்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே ஆகும். எனவே மேற்கூறிய அறிகுறிகள் நோயாளிக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆயினும் எல்லா அறிகுறியும் ஒரு நோயாளிக்கு இருக்குமென்பது இல்லை. எனவே முதலில் ஓரிரு அறிகுறியே தோன்றும் எனவே குடும்பத்தினர் இதை மிகவும் கவனமாக அறிந்து தகுந்த வைத்தியரை நாடவேண்டும். இவ்வாறு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கும்போது நோய் குணமடைய வாய்ப்புண்டு. இவ்வாறு இல்லாமல் மந்திரம், மாயம், செய்வினை, போய், பிசாசு என நினைத்து வீணாக பணத்தையும் காலத்தையும் விரயம் செய்து நோய் முற்றி நோயாளிக்கும் குடும்பத்தினருக்கும் பலவித கஸ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காலம்கடந்த சிகிச்சை எதிர்பார்த்த பலனை தருவதில்லை.

உசாத்துணை நூல்
Dr.சோமசுந்தரம். ஓ, Dr.ஜெயராமகிருஷ்ணன்.தி. மனநோயும் இன்றைய மருத்துவமும். தமிழ்நாடு

– சி.நிஷாந்தன்,
NISD, உளவளத்துணை கற்கை நெறி,
கிளிநொச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *